பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தலைவர் ஆகிறார்

சென்னை:

டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது.

1991-ம் ஆண்டு முதன் முதலாக பாட்டாளி மக்கள் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. 194 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 982 வாக்குகளுடன் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது.

முதலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு 1998-ம் ஆண்டு தேர்தல் கமிஷனால் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்று முதல் மாம்பழம் சின்னத்திலேயே பா.ம.க. போட்டியிட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு 114 இடங்களில் போட்டியிட்டு முதன் முதலாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியதோடு 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்தது. 15 லட்சம் வாக்குகளை அள்ளிய பா.ம.க. போட்டியிட்ட 27 இடங்களில் 20 இடங்களை கைப்பற்றி சாதனை வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அந்த கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் வழங்கியது.

2006-ம் ஆண்டு தி.மு.க. அணிக்கு மாறிய பா.ம.க. 31 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 18 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. 2011-ம் ஆண்டு தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் 30 இடங்களில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து 2016-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தும் ஒரு இடத்தில் கூட பா.ம.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் 23 லட்சம் வாக்குகளை பெற்று பா.ம.க. சாதனை படைத்தது.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை முறித்து கொண்டு தனித்து போட்டியிட்டது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பா.ம.க. தயாராக தொடங்கி உள்ளது. அதுபோல 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதிலும் அந்த கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக உள்ளார்.

எனவே கட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 28-ந்தேதி சென்னை திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் மகாலில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தற்போது ஜி.கே.மணி இருந்து வருகிறார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்வு ஆனார். அன்று முதல் இன்று வரை அவர் 12 தடவை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதன் மூலம் ஜி.கே.மணி பா.ம.க. தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ம.க.வில் வெள்ளி விழா தலைவர் என்ற அந்தஸ்தை ஜி.கே.மணி பெற்று இருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதையடுத்து ஜி.கே.மணிக்கு விடை கொடுத்து விட்டு பா.ம.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பா.ம.க.வில் இளைஞரணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க.வின் புதிய தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 28-ந்தேதி நடக்கும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்காகவே இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் ஒருமித்த கருத்துடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க.வின் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இந்த நடவடிக்கை அமைய உள்ளது.

பா.ம.க.வை பலப்படுத்தி ஆட்சியை பிடிக்க வியூகம் வகுக்கும் வகையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் பா.ம.க.வில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் மிகப்பெரிய பலத்தை இன்னமும் பெற முடியவில்லை என்ற ஆதங்கம் டாக்டர் ராமதாஸ் மனதில் உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் டாக்டர் அன்புமணி ராமதாசின் நடவடிக்கைகள் அமையும் என்று பா.ம.க. மூத்த நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.