பிரான்சில் கடற்கரை ஒன்றிற்குச் சென்ற குடும்பம் ஒன்று, பெரிய கடல் அலை ஒன்றில் சிக்கியது.
பிரிட்டனியில், வியாழக்கிழமை மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் கடற்கரையிலிருந்த பள்ளம் ஒன்றில் இறங்கியிருக்கிறார்கள்.
அப்போது திடீரென பெரிய அலை ஒன்று வர, அவர்கள் மூவரும் அந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அந்த மூன்று பேரில் 55 வயது தந்தை, 33 வயது தாய் ஆகிய இருவரை மீட்புக் குழுவினர் மாலை 7.30 மணி வாக்கில் மீட்டு, உயிர் காக்கும் சிகிச்சையளித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற இயலவில்லை.
பின்னர், இரவு 10 மணியளவில் அந்த தம்பதியின் 12 வயது பிள்ளையின் உடல், உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் அந்த பள்ளத்தில் இறங்காததால், அவர்கள் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
ஆனாலும், கண் முன்னே தங்கள் குடும்பத்தினர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததைக் கண்டதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் இருப்பதையடுத்து அவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.