80 வயது மூதாட்டி வெயிட் லிஃப்டிங் செய்து தன் பேரனுக்கு சவால் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில், ரீமாசென்னை இம்ப்ரஸ் செய்வதற்காக விவேக், வெயிட் லிஃப்ட்டிங் செய்வதுபோல காட்டிக்கொள்வார். அங்கு வரும் பரவை முனியம்மா அட்டையால் செய்யப்பட்ட அவற்றை ஒரு கையால் தூக்கிவீசிவிட்டு ‘இதைத்தான் நைட்டு முழுக்க ஒட்டிக்கிட்டு கெடந்தியா’ என சொல்லிவிட்டுச் செல்வார்.
கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒரு காட்சிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் வெயிட்டை தூக்குபவர் ஆணல்ல, பெண் அதிலும் 80 வயது பாட்டி. அவர் தூக்குவது போலி வெயிட்டும் அல்ல. அந்த வீடியோவில் பாட்டி, தன் பேரன் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் வெயிட்டை சர்வசாதாரணமாகத் தன் தோளுக்கு மேலே தூக்கி, பேரனுக்கே சவால்விடும்படி சில நொடிகள் தாங்கிப் பிடித்து நிற்கிறார்.
பளு தூக்குவது இளம் வயதினருக்கே கடினமான விஷயமாகக் கருதப்படும் நிலையில், 80 வயதான பாட்டி, சர்வசாதாரணமாக அதைத் தூக்குவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆகையால் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வரும் பாட்டியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் அதற்கு ஏகப்பட்ட கமென்ட்ஸும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.