பெங்களூரு : போலி ஆதார் தகவல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்த முயன்றதாக, சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானம் வாயிலாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்ட ஒரு ‘பார்சல்’ மீது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை சோதனை செய்த போது, ஆயத்த ஆடைகள் இடையே, 4.496 கிலோ போதைப் பொருள் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 89.92 லட்சம் ரூபாய். இந்த பார்சலை அனுப்பியவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்த நபர், மற்றவருடைய ஆதார் அட்டையில் தன் புகைப்படத்தை ஒட்டி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement