கொல்கத்தா: தனது மகளை சட்ட விரோதமாக அரசு வேலையில் நியமனம் செய்தது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சரிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தியது. மேற்கு வங்க கல்வித் துறை இணையமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை முறைகேடாக ஆசிரியர் பணியில் நியமித்தார். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அங்கிதாவை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது. மேலும், இதுநாள் வரையில் அவர் வாங்கிய சம்பளத்தையும் அரசிடம் திருப்பித் தரவும் உத்தரவிட்டது.இந்த ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து சிபிஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 3வது நாளாக நேற்றும் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கிதாவை பணியில் சேர்ப்பதற்காக பரேஷ் சந்திரா யாரிடம் எல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற விபரங்கள் குறித்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதேபோல், அடுத்த வாரம் ஆஜராகும்படி அங்கிதாவுக்கும் சம்மன் அனுப்பப்படும்,’ என்றனர்.