தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் தொடர்ந்து 209 நாட்களாக 100 அடிக்கும் கீழ் குறையாமல் நீர் இருப்பதால், நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கு குறுவை மற்றும் சம்பாவுக்கு நீர் பற்றாக்குறை இருக்க வாய்ப்பு இருக்காது என டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு விவசாயப் பணிகளை துவக்கியுள்ளனர்.
காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ம் தேதி அணை மேட்டூர் அணை மூடப்படுவது வழக்கம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் உள்ளிட்ட 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு பல்வேறு பாசன வாய்க்கால்கள் பிரிந்து பாசன வசதியை ஏற்படுத்தி வருகிறது. ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டவுடன், கோடை காலமாக இருப்பதால் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. அதே போல் மேட்டூர் பகுதியிலும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால் விவசாயத்துக்கு தண்ணீரின் பயன்பாடு குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 24-அம் தேதி 99 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இருந்தது. அதன் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் இன்று (மே 21-ம் தேதி) வரை தொடர்ந்து 209 நாட்களாக அணையின் நீர்மட்டம் குறைய 100 அடிக்கு குறையாமல் காணப்படுகிறது.
இதில் நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பதால் குறுவை சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே தொடங்கி அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு குறுவை, சம்பாவுக்கு நீர் பற்றாக்குறை என்பது இருக்காது எனவும், எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் விவசாய பணிகளை மேற்கொள்ள இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்