உதகை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால நீண்டகாலம் தாமதம் செய்தார். இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.கூடாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் உதகையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்ற 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.