புனே:
லால் மஹால் என்பது புனேவில் மிகவும் பிரபலமான நினைவு சின்னம் ஆகும். சத்ரபதி சிவாஜி அவரது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை லால் மஹாலில் கழித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, மராத்தி நடிகையான வைஷ்ணவி பாட்டில், பணியில் இருந்த பாதுகாவலர் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் லால் மஹால் நினைவுச் சின்னத்தின் வளாகத்தில் நடனம் ஆடியுள்ளார். அதனை, அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
அதன்பின்னர், வைஷ்ணவி பாட்டில் அந்த வீடியோவை சமூல வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று வைஷ்ணவி பாட்டில் மற்றும் மூன்று பேர் மீது லால் மஹால் பாதுகாவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மகராஷ்டிரா மந்திரி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத் வைஷ்ணவி பாட்டிலின் வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், “சிவாஜி மகாராஜாவின் லால் மஹால் வீடியோ எடுப்பதற்கான இடம் அல்ல. இந்த மாதிரியான செயல்கள் இனி நடைபெற கூடாது. யாராவது அவ்வாறு செய்தால் அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோவிற்கு பல கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் பிரசாந்த் ஜக்தாப் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதியம் லால் மஹாலுக்கு வெளியே போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.