லிடியனின் புதிய முயற்சி – ‛ஜாஸ்' இசையில் முதல் ஆல்பம் உருவாக்கம்
இளம் வயதில் இசையில் பல்வேறு சாதனை படைத்து வருபவர் லிடியன் நாதஸ்வரம். மலையாளத்தில் மோகன்லால் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜாஸ் இசையில் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். ‛குரொமாட்டிக் கிரமாட்டிக்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் உலகில் உள்ள பிரபலமான இசை கலைஞர்களின் பங்களிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆல்பம் வருகிற ஜூன் 21ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது. இவ்வளவு இளம் வயதில் ஜாஸ் இசையில் இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கிய இந்தியர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்க போகிறது. உலகளவில் கூட இது முயற்சி என்கிறார் அவரது தந்தை வர்ஷன்.
இதுகுறித்து வர்ஷன் கூறுகையில், ‛‛ஜாஸ் இசையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதை இன்னும் பிரபலப்படுத்தும் விதமாக முற்றிலும் புதிய முயற்சியாக இந்த ஆல்பத்தை லிடியன் உருவாக்கி உள்ளார். குரொமாட்டிக் என்பது இசையில் உள்ள 12 நோட்ஸ். அதை வைத்து ஜாஸ் இசையில் இந்த ஆல்பத்தில் 12 பாடல்களை உருவாக்கி உள்ளார். இந்த ஆல்பத்தில் உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தேவ் விக்கல் போன்றோர் பணியாற்றி உள்ளனர். இளையராஜா சார் இந்த ஆல்பத்தை கேட்டு பாராட்டினார். இதுபோன்ற முயற்சிக்கு கிராமி விருது கூட கிடைக்க வாய்ப்புள்ளது. இளையராஜா சார் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களை வைத்து இந்த ஆல்பம் வெளியீட்டை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம்'' என்றார்.
இளையராஜா பாராட்டு
லிடியனின் இந்த முயற்சியை இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛லிடியன் நாதஸ்வரம் ஜாஸ் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதில் உலகளவில் பிரபலமான இசைக்கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். அவரின் குரொமாட்டிக் கிரமாட்டிக் ஆல்பம் பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த ஆல்பம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்'' என்றார் இளையராஜா.