சொத்து வரியை தமிழகத்தில் 150 சதவீதம் உயர்த்திய முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும் போது, ஹிட்லர் பாணியில் உள்ளதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில்,
“திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அதைப் பற்றி இப்போது அவர் பேசுவதே இல்லை.
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியபோது ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இப்போது சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளார். ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது ஹிட்லர் பாணியில் உள்ளது.
மீண்டும் மீண்டும் தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம் உருவாகியுள்ளது. அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். அம்மா உணவகங்களை மூடுகின்றனர். நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று ஆங்காங்கே போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர முடியாது என்கிறது திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். இப்படி எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர் திமுகவினர்.
பாஜக தமிழகத்தில் உள்ளே வந்துவிடும் என்று கூறி சிறுபான்மை மக்களையும், தமிழக மக்களையும் திமுக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எதிர்காலத்தில் திமுக பெரிய தோல்விகளையும், வீழ்ச்சியும் நிச்சயம் சந்திக்கும். தமிழக மக்களின் சோதனை தான், திமுகவின் சாதனையாகும். திமுகவின் இந்த ஆட்சியில் திமுகவும், அக்கட்சியினருமே செழிப்பாக வளர்ந்து வருகின்றனர்” என்று டிடிவி தினகரன் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.