IPL 2022 Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆஃப் சுற்று நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை ஞாயிற்று கிழமை நடைபெறும் கடைசி (70வது) லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
புள்ளிபட்டியலில் குஜராத் முதலிடத்திலும் ராஜஸ்தான் 2ம் இடத்திலும் உள்ள நிலையில், இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் மே 24 அன்று நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. எலிமினேட்டர் சுற்றில், 3ம் இடத்தில் உள்ள லக்னோ அணி களமிறங்குகிறது. அந்த அணி சந்திக்க இருக்கும் அணியின் முடிவு இன்னும் எட்டவில்லை. இன்று மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை பெறும். தவறும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு அந்த வாய்ப்பு கிட்டும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை முதலாவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. பின்னர் 4 முறை சாம்பியன் சென்னை அணியும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்தன. இந்த அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்திலாவது ஆறுதல் வெற்றியுடன் விடைபெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கொல்கத்தா லக்னோ அணியிடமும், சென்னை ராஜஸ்தானிடம் தோல்வி கண்டன. மும்பை அணியின் முடிவு இன்று தெரிந்து விடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ரசிகர்களிடம் இரண்டு கேள்விகள் தொற்றிக்கொண்டு இருந்தன. அவை, 2023 ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் எம்எஸ் தோனி களமாடுவாரா? ஆம் எனில், அவர் கேப்டனாக நீடிப்பாரா? என்பவை தான். இது குறித்து தோனி தனது முடிவை ஏற்கனவே தெரிவித்து விட்ட நிலையில், சென்னை அணி நிர்வாகம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
And he said.. YES! 💛#THA7A #WhistlePodu #Yellove 🦁https://t.co/E2Hj2CtW4f
— Chennai Super Kings (@ChennaiIPL) May 21, 2022
மேத்யூ ஹைடன் பேட்டி
இந்நிலையில், தோனி குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ள முன்னாள் சிஎஸ்கே தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், தோனியின் தனிப்பட்ட செயல்திறன் ஒரு காரணியாக இருந்தால், அவர் அடுத்த சீசனில் அணியை வழிநடத்த வாய்ப்பில்லை என்றும், சென்னை அணியினருக்கு அது ஒரு “உணர்ச்சிமிக்க முடிவாக” இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தோனியின் ஸ்ட்ரைக் ரேட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஒப்பிட்டு, தோனியை விட சாம்சன் ஒரு பேட்டராக என்ன செய்திருந்தாலும், அவரது பங்களிப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது என்று தான் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய மேத்யூ ஹைடன், “கேப்டன் பதவி என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் அது அணியின் முடிவை பொறுத்தது. இந்த சீசனில் கேப்டன் தோனி 128 ஸ்டிரைக் ரேட்டில் 200 ரன்களை அடித்துள்ளார். அவர் கேப்டனாக தொடர வேண்டுமானால் பிரச்சனை இல்லை. அவரிடம் இன்னும் பவர் உள்ளது. ஸ்டம்புகளுக்குப் பின்னால் சிறப்பாக செயல்படுகிறார். விக்கெட்டுகளுக்கு இடையில் அவர் இன்னும் வேகமாகவே ஓடுகிறார். அந்த ஸ்பீட் அவரிடம் உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட கேப்டனாகவும் அவர் இருக்கிறார். அணியை 4 முறை சாம்பியன் கோப்பையை முத்தமிட செய்துள்ளார். அவருக்கு அந்த பெருமையும், அணியை தன் பக்கம் கொண்டவராகவும் உள்ளார். ஆனால், சென்னை அணியை மீண்டும் கட்டமைக்க மற்றும் மறுகட்டமைப்பதற்காக அமரும் போது, அதில் தோனியின் பங்களிப்பாக எவ்வளவு இருக்கும்?.
அவரது உண்மையான பங்களிப்பை நீங்கள் பார்த்தால், அவர் அடுத்த சீசனில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று நான் கூறுவேன். சாம்சனைப் பாருங்கள், அவர் சராசரியாக 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அது ஒரு கேப்டனாக போதுமான பெரிய பங்களிப்பாக இருக்குமா? என்று இன்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, தோனியின் கேப்டன் பதவி குறித்து பேசும் போது அது மிகவும் உணர்ச்சிகரமான முடிவாக இருக்கும். ஆனால், ரசிகர்கள் அவருக்கு எவ்வாறு பதிலளிக்கிறார்கள் பாருங்கள். அது மிகவும் முக்கியமானது.” என்று அவர் கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் முரண்
இந்த உரையாடலின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹைடன் கருத்தில் முரண்பட்டு பேசினார். மேலும் தோனி அடுத்த சீசனிலும் கேப்டனாக தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
“எம்எஸ் தோனி ஜாம்பவானாக அவர் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் அவரை போதுமான அளவு பெற முடியாது, அது தான் விஷயம். சச்சின் ஓய்வு பெற்றபோது, அது ஒரு சோகமான சந்தர்ப்பம், ஏனென்றால் திடீரென்று நாங்கள் ‘ஹலோ! நாளையிலிருந்து அவர் விளையாடுவதைப் பார்க்கப் போவதில்லை!’ என்று நினைத்துக்கொண்டோம். எனவே, அதுபோல் தோனிக்காக நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாடுவார் என்று எங்களுக்குத் தெரியும், அதனால்தான் அவர் தொடர வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், ”என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil