நொய்டா: நொய்டா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து தனது பெண் தோழியுடன் சேர்ந்து பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகரின் தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொறியாளர் அஜய் குமார் (28) என்பவரும், அவரது பெண் தோழி குமாரி பிராச்சி (28) என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலோக் சிங்கின் ஊடகப் பொறுப்பாளர் பங்கஜ் குமார் கூறுகையில், ‘பொறியாளர் மற்றும் அவரது தோழி ஆகியோர் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பரஸ்பர சம்மதத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சம்பவம் குறித்து இருதரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தால், காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட குடியிருப்பில் சோதனை நடத்தியபோது, இருவரும் தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை. காதல் விவகாரமா? திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்ததால், அவர்களுக்குள் ஏதேனும் பிரச்னையா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.