TNPSC குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? வினாக்கள் எப்படி கேட்கப்பட்டன?

TNPSC group 2 exam how questions asked?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, வினாக்கள் எப்படி கேட்கப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வின் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. 5529 பணியிடங்களுக்கான தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.

தேர்வைப் பொறுத்தவரை தமிழ் மொழிப்பாடம் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இலக்கணம் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், ஆனால் நூல், நூலாசிரியர் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் சார்ந்த வினாக்கள் மற்றும் இலக்கியத்தில் ஒரு சில பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தது.

அடுத்தப்படியாக, கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். அதில் 25 வினாக்களுக்கு 25 வினாக்களுமே விடையளிக்க கூடியதாக இருந்தது. பெரும்பாலும் தனிவட்டி, கூட்டு வட்டி சார்ந்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன.

பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இதில் புவியியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கேள்விகள் எளிமையாக இருந்தது. புவியியலில் இருந்து கிட்டதட்ட 16 வினாக்களும், அரசியலமைப்பு பகுதியிலிருந்து 7 வினாக்களும் இடம்பெற்றிருந்தன.

தேர்வர்கள் மிகவும் கவலையோடு எதிர்நோக்கிய பகுதிகள் யூனிட் 8 மற்றும் யூனிட் 9. இந்த இரண்டு பாடங்களும் தற்போதைய குரூப் 2 தேர்வில் தான் முதன்முதலில் கேட்கப்பட்டுள்ளது. எனவே எப்படி வினாக்கள் வரும் என தேர்வர்கள், தயங்கியிருந்த நிலையில், வினாக்கள் சற்று எளிமையானதாகவே கேட்கப்பட்டுள்ளன. தமிழ் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த வினாக்கள், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதியை படிப்பது தமிழ் மொழி பகுதியில் சில வினாக்களுக்கு விடையளிக்க உதவக்கூடியவை. எனவே தமிழ் மொழிப் பாடம் எடுத்தவர்களுக்கு யூனிட் 8 சற்று எளிமையாக இருந்திருக்கலாம்.

யூனிட் 9 ஆன தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தததாக கூறப்படுகிறது. இதில் கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டன. ஏனெனில் இவற்றில் கேட்கப்பட்ட வினாக்களை நடப்பு நிகழ்வுகள் பகுதியோடு பொருத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: Post Office Jobs: தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு பணி; பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம்?

வரலாறு கேள்விகளில் சில கேள்விகள் மிக எளிமையாகவும், சில கேள்விகள் பதிலளிக்க சற்று கடினமாகவும் இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். இந்திய தேசிய இயக்கம் சார்ந்த கேள்விகள் எளிமையாகவே இருந்தது.

அறிவியல் பாடத்தில் இருந்து வினாக்கள் சற்று கடினமானதாக இருந்தாலும், வினாக்கள் குறைவான அளவிலே கேட்கப்பட்டுள்ளது.

பொது அறிவு வினாக்களில், பெரும்பாலான வினாக்களுக்கு கொடுக்கப்பட்ட விடைகளில் பொருந்ததாதை நீக்கினாலோ, அல்லது நன்றாக தெரிந்த ஒரு விடையை தேர்ந்தெடுத்தாலோ, அந்த வினாவிற்கு விடையளிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. அதேபோல், பொருத்துக வினாக்கள் பெரும்பாலும், ஒரு விடை தெரிந்தாலே எளிதாக பொருத்திவிடும் வகையில் கேட்கப்பட்டிருந்தன.  

மொத்தத்தில் தேர்வு ஆவரேஜ் அளவிலே இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.