மத்திய அரசு மே 21-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.8, ரூ.6 எனக் குறைத்தது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில், “(கலால் வரி குறைப்பு) அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் தாக்கத்தை ஏற்படுத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இதைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “(ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு பாதுகாப்பு கூட்டணியான) குவாட்டின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தபோதிலும், அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி இந்தியா மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தள்ளுபடியில் ரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்கியிருக்கிறது.
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் உதவியுடன் இதைத்தான் என்னுடைய அரசாங்கம் அடைய முயன்றது. ஆனால், தற்போதைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைமையிலான அரசாங்கம், `பொருளாதாரத்தின் விஷயத்தில் தலை துண்டிக்கப்பட்ட கோழியைப் போல ஓடுகிறது’ “என தற்போதைய அரசைச் சாடி கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.