அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் இலவச வீடு கட்டி முடிக்கப்பட்டதாக அரசு தகவலில் பதிவிடப்பட்ட நிலையில், பாதி வீடு கூட கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாக மக்கள் தங்கள் தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத்தாங்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்த தங்கராசு – ராஜாத்தி, குமார் – அமிர்தம், சேனாதிராசன் – மகேஸ்வரி ஆகியோர் அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டை பாதி கட்டி முடித்துள்ள நிலையில், அரசாணையில் இவர்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கராசு – ராஜாத்தி தம்பதியினருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் 2 தவனையாக மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் வந்துள்ளதாகவும், மேற்கொண்டு பணம் வராத நிலையில் கடன் வாங்கி பாதி வீடை கட்டியுள்ளனர். வீட்டை பூர்த்தி செய்வதற்கு மீதி பணத்தை அதிகாரிகளிடம் கேட்டதற்கு `வீட்டை முடித்துவிட்டு வாருங்கள் தருகிறோம்’ என்று சொன்னதாக தெரிவிக்கிறார்கள். பொருட்கள் கிடைத்துவிட்ட போதும்கூட, மீதி பணம் கிடைக்காததால் கடந்த 4 வருடமாக வீட்டை கட்டி முடிக்க முடியாமல் இடிந்து விழக்கூடிய பழைய வீட்டில் வசித்து வருவதாக கூறுகிறார்கள் இவர்கள்.
இதையும் படிங்க… பேரறிவாளனை தொடர்ந்து 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இதே போல சேனாதி ராஜன் – மகேஸ்வரி குடும்பத்தினரும் அரசின் இலவச வீட்டிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் பெற்று விட்ட நிலையில் 30 மூட்டை சிமெண்ட், 75 கிலோ கம்பி, கதவு ஜன்னல் வந்திருப்பதாகவும் வர வேண்டிய மீதி சிமெண்ட் கம்பியை பல முறை அதிகாரிகளிடம் போய் கேட்டும் தரவில்லை என்று கூறும் இவர்கள் வீட்டை கட்டி முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். 3 வருடமாக வீட்டை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் இவர்கள், 4 பிள்ளைகளுடன் பாதுகாப்பு இல்லாத குடிசையில் வசித்துவருகின்றனர். இவர்களது வீடும் கட்டி முடிக்கப்பட்டதாகவே அரசு குறிப்பில் இருக்கின்றது.
இதே போன்று குமார் -அமிர்தம் இவர்களும் அரசு இலவச வீட்டை கட்டி முடித்து விட்டதாக அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பிய நிலையில், இவர்கள் வீடும் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் பாதி வராத நிலையில் அதிகாரிகளிடம் அழைந்தும் கிடைக்காததால் வீட்டை பாதியிலேயே போட்டு விட்டு சிறு குடிசையில் வசித்துவருகின்றனர். கான்கிரீட் வீட்டில் வாழப்போகிறோம் என்று மகிழ்ந்த இவர்களது சந்தோஷமும், கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
இவர்களின் கான்கிரீட் வீடு கனவு, கனவாகவே முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் இவர்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/154027.webp.webp.webp)