கொழும்பு,-இந்தியா அனுப்பிய அரிசி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேற்று இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன.இந்நிலையில் தமிழக அரசின், 90 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ பால் பவுடர், 25 ஆயிரம் கிலோ மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களுடன் சென்ற கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது.
நிவாரணப் பொருட்களை இந்திய துாதர் கோபால் பக்லே பெற்று, இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிசிடம் ஒப்படைத்தார். இவ்விழாவில் பெய்ரிஸ் பேசியதாவது:இந்தியா இதுவரை, 33 ஆயிரத்து 750 கோடி ரூபாய் அளவிற்கு உதவி செய்துள்ளது.இதற்கு முன் இந்த அளவிற்கு வேறு எந்த நாட்டிற்கும் இந்தியா உதவி செய்ததில்லை.எதிர்பார்த்ததை விட அதிகமாக உதவி செய்யும் இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது:இந்தியாவில் இருந்து மனிதாபிமான அடிப்படையில், 200 கோடி ரூபாய்க்கு அரிசி, பால் பவுடர், மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதற்கு இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எச்சரிக்கை
இலங்கை அனுராதபுரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்ததால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், பெட்ரோல் நிலைய உரிமையாளர் வீட்டை தீ வைத்து எரித்தது. அதுபோல, பெட்ரோல், டீசல் லாரிகளை வழி மறித்து வேறு இடங்களுக்கு திருப்பி விடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இது குறித்து இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா கூறும்போது, ”பெட்ரோல், டீசல் லாரிகளை வேறு இடத்திற்கு அனுப்புவது, மறுத்தால் தீ வைப்போம் என மிரட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்தால், எரிபொருள் சப்ளை நிறுத்தப்படும்,” என, எச்சரித்துள்ளார்.
Advertisement