ரூ 300 கோடி அளவில் மோசடி செய்த தமிழ் தம்பதி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் வெளிநாட்டில் பதுங்கியிருக்கலாம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் விமல்குமார் (37). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35) இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை காளப்பட்டியில் தலைமை அலுவலகத்தை தொடங்கி யூடியூப் சேனல் மூலம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அறிமுகமாகினர்.
ஆல்பா போரெக்ஸ் டிரேடு எனப்படும் ஓன்லைன் மூலம் லண்டனில் தான் தொடங்கியுள்ள நிறுவன வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார். முதலீட்டு தொகையுடன் சேர்த்து மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குவதாக உறுதியளித்தனர்.
அதாவது ஒரு நபர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அவர் மாதந்தோறும் அசலில் ரூ.10 ஆயிரம், வட்டியாக ரூ.8 ஆயிரம் என ஒவ்வொரு மாதமும் தலா ரூ.18 ஆயிரம் வழங்கி 10 மாதத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருப்பி செலுத்துவதாக உறுதியளித்தாக கூறப்படுகிறது. இவ்வாறு தன்னிடம் முதலீடு செய்த ஒருசில நபர்களுக்கு ஒரு ஆண்டுக்கு அவர்கள் கூறியது போல முதலீடு செய்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுத்துள்ளனர்.
இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் தம்பதியினர் கோவை மட்டுமின்றி சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, ஈரோடு, திருப்பூர் உள்பட மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து அவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டு பணத்தை பெற்று உள்ளனர்.
மேலும் அன்னிய செலவாணி வர்த்தகம் கற்பிக்கின்றோம் என்று கூறி முதலீட்டாளர்களுகடன் ஆலோசனை நடத்தினர். மேலும் ஆல்பா டிரேடர்ஸ், ஆல்பா கல்வி, ஆல்பா டிரேடிங் இன்ஸ்டியூட், ஆல்பா அகாடமி என பல்வேறு நிறுவனங்களை போலியாக உருவாக்கி உள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டு தொகையாக பெறப்பட்ட ரூ.300 கோடியை ஏமாற்றி சொகுசாக வாழ்ந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், கோவையை சேர்ந்த விமல்குமார், ராஜேஸ்வரி தம்பதிகள், பொதுமக்களின் முதலீட்டு பணத்திற்கு 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை தமிழகம் முழுவதும் சில நூறு கோடிகளை ஏமாற்றி உள்ளனர்.
இவர்கள் மிகவும் உஷாராக தாங்கள் பொதுமக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை தமிழகம் அல்லது பிற மாநிலங்களில் முதலீடு செய்யாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் முதலீடு செய்து இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்க நிரந்தர குடியுரிமை (வி.ஆர்.) பெற்று உள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி துபாய் சென்று வந்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் விமல்குமார் துபாயில் இருந்ததாக தெரியவந்தது. எனவே அந்த தம்பதியினருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காக அவர்களது பாஸ்போர்ட் விபரங்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதன் மூலம் அவர்கள் இருவரும் எந்த விமான நிலையம் அல்லது துறைமுகம் வந்தாலும் குடியுரிமை துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.