இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா| Dinamalar

இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது பற்றி ஒரு அலசல்.

தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. ‘மியூச்சுவல் பண்ட்’ வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக அமையும் தங்க இ.டி.எப்., பிரிவில், 11 லட்சத்திற்கும் மேல் புதிய முதலீட்டாளர்கள் நுழைந்திருப்பதுடன், இந்த ஆண்டில் 2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்க தகவல் தெரிவிக்கிறது.

உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச நெருக்கடியால் உண்டான இடர் மற்றும் அதிக பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், பலரும் தங்க முதலீட்டை நாடுவதாக கருதப்படுகிறது. பாரம்பரிய முதலீட்டாளர்கள் பலர், தங்கள் தொகுப்பில் போதுமான தங்க முதலீடு பெற்றிருப்பதோடு, அண்மை விலை குறைவை சாதகமாக்கி, தங்க ஒதுக்கீட்டை ஈடு செய்துள்ளனர்.

இளம் தலைமுறை

முதலீடு நோக்கில் தங்கம் அளிக்கும் பலன் தொடர்பாக மாற்றுக் கருத்து இருந்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு, சர்வதேச இடர்களில் நிலையான தன்மை உள்ளிட்ட அம்சங்கள், தங்கத்தின் சாதகமான அம்சங்களாக அமைகின்றன. எனவே தான், முதலீடு தொகுப்பில் குறிப்பிட்ட சதவீதம் தங்கம் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. பாரம்பரிய முதலீட்டாளர்கள் இதை உணர்ந்திருந்தாலும், இன்றைய தலைமுறையினர் மாறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளனர்.

அவர்கள் மியூச்சுவல் பண்ட், சம பங்கு உள்ளிட்ட முதலீட்டு வழிகளை அதிகம் நாடுகின்றனர். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதை பழைய வழி மற்றும் அதிக பயனில்லாதது என கருதுகின்றனர். தங்க முதலீடு அலுப்பூட்டும் வழியாகவும் கருதுகின்றனர்.சம பங்கு, மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்றவற்றை நாடுவது வரவேற்கத்தக்கது என்றாலும், தங்க முதலீடு அளிக்கும் பலனையும் அறிந்திருக்க வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

முதலீடு தொகுப்பில் பரவலான தன்மையை அளிப்பது, வாங்கும் சக்தியை தக்க வைப்பது, பணமாக்கல் தன்மை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர். மேலும், தங்க முதலீட்டை பாரம்பரிய முறையில் நகை வாங்குவதோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்கின்றனர்.

நவீன வழிகள்

பங்கு முதலீடு போன்றவற்றோடு ஒப்பிடும் போது தங்கம், நெருக்கடியான நேரங்களில் இடர் குறைந்ததாக அமைகிறது. உதாரணமாக, 2001ம் ஆண்டில் சம பங்குகள், 18 சதவீதம் சரிவுக்கு உள்ளான போது, தங்கம் 6 சதவீத பலன் அளித்தது. இதே போல, 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போதும், தங்கம் 26 சதவீத பலன் அளித்தது.

latest tamil news

அதே போல பணவீக்கத்தின் மத்தியிலும் தங்கம் பலன் அளிப்பதாக இருக்கிறது. எனவே, தங்கம் தொடர்ந்து பொருத்தமான முதலீடு வாய்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. இளம் தலைமுறையினருக்கும் இது பொருந்தும்.இளம் தலைமுறையினர் தங்கள் முதலீடு தொகுப்பில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொண்டிருக்கும் வழியை பின்பற்றலாம்.


மேலும், நகை வடிவில் தங்கத்தை வாங்குவதை விட, இ.டி.எப்., அல்லது மியூச்சுவல் பண்ட் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.இளம் தலைமுறை நவீன தொழில்நுட்பம் சார்ந்த வழிகளை பயன்படுத்தி முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதால், தங்க இ.டி.எப்., போன்றவை ஏற்றதாக இருக்கும். தங்க சேமிப்பு பத்திரங்களையும் பரிசீலிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.