சென்னை: உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு பேனர் வைத்த, பெரம்பலூர் மாவட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
திமுக இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எம்ஏ-மான உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தை வாழ்த்தி, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர் ஆர்.கதிரவன் என்பவர் பேனர் வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காவலர் கதிரவன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மற்றும் கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் நேற்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலருமான ஆர்.எம்.பாபு முருகவேல் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “அரசு ஊழியர்கள் அரசுக்காகத்தான் பணிபுரிய வேண்டும். அரசாங்கத்துக்காக பணியாற்றக் கூடாது. `நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட வெளியீட்டுக்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் கதிரவன் என்பவர் விளம்பரப் பதாகை வைத்திருப்பதை சமூக வலைதளங்களில் காணநேர்ந்தது. அது, காவல்துறை ஊழியர்கள் வழிமுறை நிர்வாகச் சட்டத்தின் பிரிவு 29-ன்கீழ் கண்டிக்கக்கூடிய குற்றமாகும். அவர் மீது காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
காவல்துறை தலைமை இயக்குநர் முதல் கடைநிலைக் காவலர்வரை ஒழுக்கமாகவும், ஒழுக்கத்தைப் போதிக்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும். கதிரவனின் செயல்பாடு யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.