நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுவரும் கோடை விழாவை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். கோடை விழாவின் மிகமுக்கிய நிகழ்வான 142-வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் தொடங்கிவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்காண சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை வடிவமைத்துள்ளனர். சுமார் ஒருலட்சம் கார்னேஷன் பூக்களைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் மாதிரியை 75 நீளம், 20 உயரத்தில் வடிவமைத்திருந்தனர். இது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் இந்த அலங்காரத்தின் ஒருபகுதி திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதைக் கண்ட பூங்கா பணியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்த பூங்கா அதிகாரிகள் சீரமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய அரசு தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர், “காற்றும் மழையும் அதிகமாக இருந்தது. இதனால், மலர்களைப் பதித்து வைத்திருந்த சிந்தட்டிக் பிரிக்கிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்ந்திருக்கிறது. காற்று காரணமாக எடை தாங்க முடியாமல் கீழே சரிந்திருக்கிறது. உடனடியாக சரி செய்து விட்டோம். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றனர்.