எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணியை பிரதமர் மோடி 26ந் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை:

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிரமாண்ட நுழைவு வாயில் சென்னையின் 2வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரெயில் நிலையத்தை உலகத்தரத்துடன் நவீன மயமாக்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. ரூ.760 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் 2வது நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த 2வது நுழைவு வாயில் பிரதான நுழைவு வாயிலாக தெற்கு ரெயில்வே மறு வடிவமைக்க உள்ளது.

ரெயில் நிலையத்தில் புதிய கட்டிடங்கள், நடை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பார்சல் கொண்டு செல்வதற்கான மேம்பாலம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை நுழைவு வாயில் மற்றும் காந்தி இர்வின் ரோடு நுழைவு வாயில் வருகை மற்றும் புறப்பாடுகளை கையாள தனி கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது. 2 நுழைவு வாயில்களிலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையம் மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளடக்கிய ஒரு பெரிய மல்டி மாடல் மையமாக உருவாகிறது.

2வது நுழைவு வாயிலில் நவீன கட்டிடம் கட்டப்படுகிறது. இது மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டு பல வசதிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அதன் அருகில் உள்ள காலி இடங்களில் கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கும் நிறுவனம் 2 ஆண்டுகளில் ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை முடித்து கொடுத்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.

இந்த ரெயில் நிலையத்தில் தினசரி 35 விரைவு ரெயில்கள் 240 புறநகர் மின்சார ரெயில்கள் வந்து செல்கின்றன. தினசரி சுமார் 24,129 பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையத்துக்கு 202021ம் ஆண்டு நிதியாண்டு ரூ.125 கோடி வருவாய் கிடைத்தது.

அதிகரித்து வரும் பயணிகளை கையாளும் வகையில் இந்த ரெயில் நிலையம் உலகத் தரத்தில் மறு சீரமைப்பு மேற்கொள்ள முன்மொழியப்பட்டது. இதை ஏற்று ரூ.760 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்ய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வந்தன.

இதற்கிடையில், இந்த ரெயில் நிலையத்தை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்து, என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என கேட்டறிந்தார்.

இந்த நிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வருகிற 26ந் தேதி சென்னை வரும்
பிரதமர் மோடி
தொடங்கி வைக்கவுள்ளார்.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதல் நுழைவு வாயில் உள்ள பாரம்பரிய கட்டிடம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. தற்போதுள்ள இடத்தில் கூடுதல் வசதிகளை சேர்த்து ரெயில் நிலையம் மேம்படுத்தப்படும். இந்த மேம்பாட்டு பணிகள் பற்றி பல கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டுள்ளது.

2வது நுழைவு வாயிலில் ரெயில் நிலைய கட்டிடத்தை கட்டுவதற்கு தற்போதுள்ள வசதிகள், வாகன நிறுத்தங்கள் பாதைகள் போன்றவை மறுசீரமைக்கப்பட உள்ளன. ரெயில்வே பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். எழும்பூர் ரெயில் நிலையம் 2.0 ஆக நவீனப்படுத்தும் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் அடுத்த 40 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான வசதிகள் உலகத்தரத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. பயணிகள் ரெயில் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் விதமாக தனித்தனி வருகை, புறப்பாடு, ரெயில் நலைய கட்டடங்கள், நடைமேடை, பரப்பளவுகள், சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். ரெயில் இயக்கம், பராமரிப்புக்கு மேம்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் விதமாக, சாய்வு தளங்கள், நகரும் படிகட்டுகள், மின் தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

காந்தி இர்வின் சாலை பகுதியில் 4 தளங்களைக் கொண்ட கட்டிடம் அமையவுள்ளது. இதில் தரை தளத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் பெறும் மையம், முதல் தளத்தில் அலுவலர்கள், காத்திருப்பு அறை, இரண்டாம் தளத்தில் வணிக வளாகங்கள், மூன்றாம் தளத்தில் வர்த்தக அலுவலகங்கள், ஓய்வு அறைகள், உணவகங்கள் ஆகியவை அமையவுள்ளன.

பூந்தமல்லி சாலை பகுதியில் ஆறு மாடி கட்டிடம் அமைகிறது. தரைத்தளம் முதல் தளத்தில் வணிக அலுவலகங்கள், இரண்டாம் தளத்தில் 100 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மூன்றாம் , நான்காம் தளத்தில் தலா 200 கார்கள் வீதம் 400 கார்கள் நிறுத்துமிடம் 5வது தளத்தில் அலுவலகங்கள் அமைகின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தின் இருபுறமும் பன்னடுக்கு கட்டிடம் ஒன்றும் அமையவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 3.67 லட்சம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாதிரி ரெயில் நிலையம் திட்டத்தின் கீழ், நாட்டில் 500 ரெயில் நிலையங்கள் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் அரக்கோணம் செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஓசூர் உள்பட 27 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. முதல்கட்டமாக சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் ரூ.1,000 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.