தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்களை சமீபத்தில் நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறது அறிவாலயம். வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லத்துரையிடம், “ஒரே சமூகத்தைச் சேர்ந்தவங்களுக்கு மட்டுமே கட்சிப் பதவியை வழங்கியிருக்கீங்கன்னு நிறைய புகார் வருது… உங்ககிட்ட விளக்கம் எதிர்பார்க்கிறோம்…” என்று முதன்மைச் செயலாளர் நேரு அதட்டலாகக் கேட்டிருக்கிறார். “அந்தச் சமூகத்துக்கு இதுவரைக்கும் நீங்க என்ன பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கீங்க… நாம ஆட்சிக்குவந்த பிறகு அந்தச் சமூகம் அடைந்த பலன்தான் என்ன…” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார் மாவட்டம். ஒரு கட்டத்தில் வார்த்தை சூடாகி, “என்னைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கினால்…” என்று வார்த்தையைவிட்டிருக்கிறார் செல்லத்துரை. தி.மு.க மாவட்டச் செயலாளர்களிலேயே இவர் மட்டும்தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பதிலுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதி காத்தாராம் கே.என்.நேரு.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனை விசாரணைக்கு அழைத்ததற்கு, உட்கட்சித் தேர்தல் பார்வையாளர் திருச்செங்கோடு கந்தசாமி கொடுத்த பட்டியலுக்கு மாறாக, அவரே ஒரு நிர்வாகிகள் பட்டியலை வெளியிடவைத்ததுதான் காரணம். இந்த விவகாரத்தில் தலைமைக் கழக நிர்வாகி ஒருவரையும் அவர் ‘கவனித்து’விட்டார் என்கிறது எதிர்த்தரப்பு. விசாரணைக்காக மே 17-ம் தேதி அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்ட சிவபத்மநாபனை, ஒரு நாள் முழுவதும் அலுவலகத்திலேயே காக்கவைத்துவிட்டு, “முதல்வருக்கு நிறைய வேலைகள் இருக்கு. மே 22-ம் தேதி திரும்ப வாங்க” என்று திருப்பி அனுப்பிவிட்டார்களாம். “தண்டனையைவிட இப்படி அலையவிடுறதுதான் கொடுமையா இருக்கு” என்று புலம்புகிறாராம் சிவபத்மநாபன்!
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிழலாக இருந்து, கலெக்டர் முதல் கடைக்கோடி அரசு ஊழியர் வரை அத்தனை பேரையும் ஆட்டுவித்துவருகிறாராம் சங்கர் ஆனந்த் என்பவர். மாயனூர் பஞ்சாயத்துத் தேர்தலில் ஆனந்த்தின் தாயைத் தோற்கடித்த கோபத்தில், தன்னைப் பழிவாங்கும் வேலையில் அவர் இறங்கிவிட்டாரென்று புலம்புகிறார் ஊராட்சித் தலைவர் கற்பகவள்ளி.
ஊராட்சிமன்றத் தலைவரின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்த்த ‘குற்றத்துக்காக’ கிருஷ்ணராயபுரம் உதவி வட்டார வளார்ச்சி அலுவலர் தமிழ்வாணனை வேறு ஊருக்குத் தூக்கியடித்துவிட்டாராம் மிஸ்டர் ஆனந்த்! இத்தனைக்கும் அந்த ஊராட்சித் தலைவரின் கணவர் பாக்கிய ரகுபதி, தி.மு.க-வில் மாவட்டப் பொறியாளர் அணியின் அமைப்பாளராக இருக்கிறார். “அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குவந்த சங்கர் ஆனந்த்தின் ஆட்டம் ஓவரா இருக்கு. அவர்மீது நடவடிக்கை எடுக்கலைன்னா, குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்குவோம்” என்று அறிவாலயத்தில் முறையிட்டிருக்கிறார் பொறியாளர் பாக்கிய ரகுபதி!
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டாகிவிட்டாலும், பல ஆணையங்களில் அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட தலைவர்கள், இயக்குநர்களே இப்போதும் பதவியில் இருக்கிறார்கள். இந்தத் தகவலுடன், அதிகாரிகளால்தான் அரசுக்குக் கெட்ட பெயர் என்ற புகாரையும் சேர்த்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். “அவர்களை உடனடியாக ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அந்த இடத்துக்கு புதியவர்களைப் போடலாம்…” என்று தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம் முதல்வர்.
டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரன், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு கட்டட மனை விற்பனை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினரான லீனா நாயர் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றனவாம். இவர்களைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் மாற்றப்படலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிரானவர்கள், இன்றைய சபாநாயகர் அப்பாவு-வின் பின்னால் அணிதிரள்கிறார்கள். சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலின்போது ஆவுடையப்பனுக்கு எதிரான கோஷ்டியினருக்கு ஆதரவாக அப்பாவு செயல்பட்டதாகப் புகார் எழுந்தது. நெல்லை மாவட்ட அரசியலில் சீனியரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிராக யாரும் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டதில்லை.
ஆனால், இப்போது அவரை எதிர்த்து மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியனை களமிறக்கத் தயாராகிவருகிறார்களாம். இந்த மோதல் முற்றுவது கட்சிக்கு நல்லதல்ல என்று தலைமைக்குத் தகவலைத் தட்டிவிட்டிருக்கிறார்கள் எந்தக் கோஷ்டியையும் சாராதவர்கள்.
பா.ஜ.க புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி இரண்டு வாரங்களாகப்போகிறது என்றாலும், சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த கதிரவன், சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த மேப்பல் சக்திவேல் ஆகியோர் பா.ஜ.க-வில் சேர்ந்தவுடன், மாவட்டத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் சீனியர்கள் கடும் அப்செட்.
“ஏற்கெனவே, மதுரையில் தி.மு.க சரவணனுக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பு கொடுத்ததே தப்பு, இப்போது ஒன்றியச் செயலாளர்களுக்கெல்லாம் மாவட்டத் தலைவர் பொறுப்பு கொடுக்குறீங்களே…” என்று கமலாலயத்துக்குப் புகார் மேல் புகாராக எழுதித் தள்ளியிருக்கிறார்கள் மூத்தவர்கள். ஆனால், தலைமை அதை சட்டை செய்யவே இல்லையாம்!