சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நகர்ப்புற காற்றுத் தர மேம்பாடு தொடர்பான பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த இடங்களை மீட்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளாட்சிகளில் நிலவும் கழிவு மேலாண்மை சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழ்நாடு கழிவு மேலாண்மைக் கழகத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் குப்பையை வகைப்பிரித்துப் பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தனது வார்டில், மகளிர் குழுக்களை நியமித்து, வீடு வீடாக மகளிரே சென்று குப்பையைப் பெற்று, கிலோவுக்குரூ.12 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் வரவேற்பைப் பொறுத்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிடங்குகளுக்கு குப்பை செல்வது குறைவதுடன், மக்கும் குப்பை மட்டுமே கிடங்குகளுக்குச் செல்லும். அவை விரைவில் மக்கிவிடுவதால், குப்பை கிடங்குகளில் தீ விபத்து நேரிடுவதும் தடுக்கப்படும்.
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடையை மீறி உற்பத்தி செய்ததாக 174 நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவருவதாக தகவல் வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தால், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். இதன் மூலம் சுமார் 20% சதவீதம் பேர், துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.