காங்கிரஸ் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்துவிட்டது. அண்மையில் நடந்த சிந்தனைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களை தேர்வு செய்து அங்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த யாத்திரை மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த யாத்திரையின் கொள்கை அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டுவதே.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 12 மாநிலங்களில் 3500 கி.மீ தூரம் இந்த யாத்திரை நடைபெறுகிறது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் காங்கிரஸின் இந்த முன்னெடுப்பிற்கு வரவேற்புகள் எழுந்துள்ளன.
இதுதவிர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி. ராகுல் காந்தியும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் அமைச்சர்கள், சில செய்தித் தொடர்பாளர்கள் என 70க்கும் மேற்பட்டோரை சந்திக்கவுள்ளனர். ஒருநாள் கூட்டமாக இது நடைபெறவிருக்கிறது. உதய்பூரில் நடந்த சிந்தனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு என்றே ஒரு செயற்குழு அமைத்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த செயற்குழு 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டங்களை வகுக்கும். அதேபோல் மக்களைத் தொடர்பு கொள்வதிலும் தனது போக்கை மேலும் வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாட்டு மக்களிடம் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறது. இந்த பயிற்சி கேரளாவில் நடத்தப்படும். இத்தகைய பயிற்சி மையத்தை உருவாக்குவது கட்சி 2003ல் ஏற்படுத்திய ஷிம்லா ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர கட்சியின் பொறுப்புகளில் 50% பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பது பற்றியும் முடிவெடுக்க காங்கிரஸ் ஆயத்தமாகியுள்ளது. இது மாவட்ட அளவிலான கமிட்டிகளுக்கே பொருந்தும். மாநில காங்கிரஸ் கமிட்டி, காங்கிரஸ் செயற் குழுவுக்கு இந்த வயது வரம்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் ஜோதா யாத்திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீர்திருத்தம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த யாத்திரை தேசத்தை ஒருமைப்படுத்த, நாட்டை இரு துருவகங்களாக பிரிக்க நினைப்போரிடமிருந்து காப்பாற்றும் முயற்சி என்றார்.
இந்த யாத்திரையின் போது வழியில் பல மாநிலங்களிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.