கோவை:
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின், 9 மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலத்துக்கான மழை குறித்த முன்னறிவிப்பு வெளியிட, வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தகவல்களை ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் மென்பொருள் கொண்டு தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
இதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீதம் மழை பெற வாய்ப்பு உள்ளது. மேலும் வடகிழக்கு, மற்றும் தெற்கு மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிகமாக மழை எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் சரசாரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.