இந்திய ராணுவத்தின் தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்
பிரதீப் குமார்
. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு சமூக வலைதளங்கள் மூலம் ராணுவ ரகசிய தகவல்களை இவர் பரிமாறியதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிரதீப் குமாரை போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், தகவல்கள் பரிமாறுவது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி பிரதீப் குமாரை போலீசார் கைது செய்தனர்.
பிரதீப் குமாரிடம் நடந்த விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த ராணுவ செவிலியர் சேவை ஊழியர் என்ற பெயரில், பாகிஸ்தான் பெண் உளவாளி அவருக்கு அறிமுகமாகி உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் இருந்து பிரதீப் குமாருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, காதல் வசனங்களை பேசியும், திருமணம் செய்வதாக கூறியும் ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை அந்த உளவாளி பெற்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரதீப் குமாரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.