கூலிபாளையம் ஆதிதிராவிடர் காலனி|யில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 4 வயது சிறுவன் காயமடைந்தான்.
திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்டது கூலிபாளையம் ஆதிதிராவிடர் காலனி. இங்கு, 2002- 2003-ம் ஆண்டு இந்திரா குடியிருப்புதிட்டத்தின் கீழ் 16 வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டன. இந்நிலையில்,போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தயாநிதி, வெண்ணிலா தம்பதி வசித்து வந்த வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், மகன் பரசுராமன் (4) காயமடைந்தான். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மகனுக்கு சிகிச்சை அளித்தனர். இதே நிலையில் மற்ற வீடுகளும் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு,எங்கள் காலனியில் 16 வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால், போதிய பராமரிப்பில்லாததால், பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. பலரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால், வீடுகளை பராமரித்து சீரமைத்து தர வேண்டும்” என்றனர். இந்நிலையில், மேற்கூரை பெயர்ந்து விழுந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் நேற்றுபார்வையிட்டு, அறிக்கையை வடக்கு வட்டாட்சியருக்கு அனுப்பினார்.
வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் கூறும்போது, “வீடு கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது அந்த வீடுகளின் நிலை மற்றும் அவர்கள் தரப்பு கோரிக்கையை, ஆட்சியருக்கு அனுப்பிவைப்போம்” என்றார்.