புதுடெல்லி: கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்துவின் கைதி எண், அறை எண் வெளியாகி உள்ளது. அவர் வெள்ளை நிறை ஆடையில் ஒருநாள் எப்படி போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மீது, கடந்த 1987ம் சாலையில் நடந்த சண்டையில் ஒருவரை அடித்து கொன்ற வழக்கில், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் சரணடைய சித்து அவகாசம் கேட்டதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உடனே, சரணடைய உத்தரவிட்டது. அதன்படி, பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சித்து சரணடைந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாளைக்கு கலர் கலராக 3 விதமான ஆடைகளை மாற்றி ஆடம்பரமாக இருந்து வந்த சித்து, வெறும் வெள்ளை ஆடையில் 10ம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான கைதி எண் 1,37,683. பாட்டியாலா சிறையில் கைதிகளுக்கு ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கு என்று பார்ப்போம். * அதிகாலை 5:30 மணி: கைதிகள் எழ வேண்டும்.* காலை 7 மணி: தேநீருடன் பிஸ்கட் அல்லது கருப்பு கொண்டைக்கடலை வழங்கப்படும்.* காலை 8:30 மணி: காலை உணவு (6 சப்பாத்தி, பருப்பு/காய்கறிகள்)* காலை 9 மணி: குற்றவாளிகள் ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும். * மாலை 5:30 மணி: குற்றவாளிகள் வேலையை முடிக்கிறார்கள்.* மாலை 6 மணி: இரவு உணவு (6 சப்பாத்தி, பருப்பு/காய்கறி)* இரவு 7 மணி: கைதிகள் அறைகளில் அடைக்கப்படுவர். – தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்யலாம். திறமையற்ற, அரைத் திறன் அல்லது திறமையான கைதி என வகைப்படுத்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு தினமும் ரூ.30 முதல் 90 வரை சம்பளம் வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, தண்டனை பெற்றவர்களுக்கு ஊதியம் இல்லாமல் தொழில் பயிற்சி அளிக்கப்படும். கிரிக்கெட்டில் ஜொலித்து பல ஆட்ட நாயகன் விருதுகளை வென்று, பலருக்கு பயிற்சி அளித்த சித்துவை இன்று சிறை வாழ்க்கை ஆட்டம் காண வைத்துள்ளது.* நீயும்…. நானும்…சித்து அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில், சிரோமணி அகாலி தளத்தின் தலைவர்களில் ஒருவரான பிக்ரம் சிங் மஜிதியாவும் போதைப்பொருள் வழக்கில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்துவை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால், இருவரும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன் ஜோத் கவுரிடம் தோற்றனர்.* நைட் புல்லா தூக்கமில்லசித்து அடைக்கப்பட்டுள்ள அறையில் மொத்தம் 4 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் அடைக்கப்படும் முன்பாகவே, வெளியில் அவர் சாப்பிட்டு விட்டார். இதனால், சிறையில் இரவு அளித்த உணவை அவர் சாப்பிடவில்லை. மேலும், இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.