சட்டத்திற்கு புறம்பாக மதுவிருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் மையப் பகுதி கோயம்பேடு அருகே அமைந்துள்ள பிரபலமான வி.ஆர். மாலில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது.
இந்நிலையில் வளாகத்தின் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த ‘MANDRAGORA’ என்ற உலகப் புகழ்பெற்றவரின் பெயரால் DJ ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் தலா 1500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மேலும் அதிக அளவு மக்கள் கூடும் இந்நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெறாமல் நடைபெற்றது. இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அனுமதி பெறாமல் நடந்த இந்த நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அனைவரும் மது போதையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் நடனமாடி பாடல் பாடிய ஐ.டி ஊழியர் பிரவீன் என்பவர் திடீரென்று மயங்கி விழுந்த நிலையில், அளவுக்கு அதிகமாக அவர் குடித்திருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துரை, விக்னேஷ், பரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக மது விருந்து நடத்தப்பட்ட மாலுக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும் முறையாக அனுமதி பெறாமல் சென்னை மாநகராட்சியில் இதுபோன்று மதுவிருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.