சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது

2009 இலங்கைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் பேரணி மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர் நினைவேந்தலில் பங்கேற்றனர். இலங்கை போரில் கொல்லப்பட்ட பாலசந்திரன்,  இசைப்பிரியா படங்களை ஏந்தி இந்த பேரணி நடைபெற்றது.
image

இந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ” இறந்தவர்களுக்கு கடலோரம் நினைவேந்துவது தமிழர் முறை. மெரினாவில் நினைவேந்தலுக்கு இடம் கேட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். பெசன்ட் நகரில் அனுமதி தருவதாக சொல்லிவிட்டு இன்று மீண்டும் அனுமதி மறுத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என அதிமுக எடுத்த நிலைப்பாட்டைத் தான் தற்போதைய திமுக அரசும் எடுத்திருக்கிறது, இது அதிர்ச்சியளிக்கிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும், அம்மக்களுக்கு தனி நாடு கேட்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். ஆனால் , நினைவேந்தலை தடுக்கிறீர்கள். நினைவேந்தலை தடுக்க என்ன காரணம்?  திமுக அரசுக்கு நாங்கள் மெழுகுவர்த்தி ஏந்துவதால் என்ன பிரச்சனை வந்துவிடும்?  அப்படியானால் மத்திய அரசு சொல்வதையெல்லாம் திமுக அரசு அப்படியே கேட்கிறதா?
image 
நினைவேந்தலை நியாயமாக தமிழக அரசு நடத்த வேண்டும். ஆனால் தடுக்கிறார்கள். நினைவேந்தல் தொடர்பாக தமிழக அரசு தம் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட இந்த நினைவேந்தலில் பங்கேற்ற 500 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.