சேலத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பு, பெட்ரோல் பரிசாக வழங்கிய உறவினர்கள் 

சேலம்: சேலத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பு, பெட்ரோல் போன்றவற்றை உறவினர்கள் பரிசாக வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு எரிபொருளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு உறவினர்கள் மண் அடுப்பு, பெட்ரோல், விறகுகளை பரிசாக வழங்கிய ருசிகர சம்பவம் நடந்தது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்காட்டை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரியான மணமகன் முகமது இம்ரான் அராபாத்துக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த மணமகள் ஆடிட்டர் பாத்திமா இர்பானாவுக்கும் நேற்று (22ம் தேதி) திருமணம் நடைபெற்றது.

நாளுக்கு நாள் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வடைந்து, பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு மக்களின் சிரமத்தை உணர்ந்து எரிபொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருமண விழாவில் மணமக்களுக்கு, மண் அடுப்பு, விறகு மற்றும் பெட்ரோல் பரிசாக உறவினர்கள் வழங்கினர்.

இதுகுறித்து மண் அடுப்பு, விறகு, பெட்ரோல் பரிசு அளித்த உறவினர்கள் கூறும்போது, ”இன்றைய காலகட்டத்தில் எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடி, கூடுதல் செலவினத்தால் தவித்து வருகின்றனர். எனவே, புதியதாக திருமணமாகும், இத்தம்பதியர் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, விலைவாசி உயர்வை சமாளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இப்பரிசுகளை வழங்கியுள்ளோம். மேலும், மத்திய அரசு எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால், பொதுமக்கள் அனைவரும் பழங்கால முறைப்படி மண் அடுப்பை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையிலும் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பை பரிசாக வழங்கியுள்ளோம்,” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.