தமிழக அரசுக்கு 72 மணி நேரம் கெடு; கோட்டையை முற்றுகை இடுவோம்: அண்ணாமலை

Annamalai announced protest against DMK government on Petrol Diesel price issue: திமுக வாக்குறுதி அளித்தப்படி, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 21) மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தநிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல், 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட, பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி உள்ளது. 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து குறித்து கேட்டதற்கு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மன்மோகன்சிங் ஒவ்வொருமுறையும் அனைத்து மாநில முதல்வர்களை கேட்டு தான் பெட்ரோல் விலையை ஏற்றினாரா? இறக்கினாரா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதைப் பார்க்கும்போது பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தை விட்டு வெளியே வர வேண்டுமென்றால் கூட இவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் போல. காலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மாலையில் அவரது இறப்புக்கு காரணமானவர்களை விடுவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்கள். வடிவேல் போல முதல்வர் செயல்படுகிறார்.

இதையும் படியுங்கள்: நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வரிவிலக்கு கேட்கும் தி.மு.க!

அடுத்ததாக, பேரறிவாளனை முதல்வர் ஆரத்தழுவி வரவேற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ”இந்தியாவே அதிர்ச்சியில் இருக்கிறது. இது போன்று முதல்வர் நடந்து கொள்வதால் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நடுரோட்டில் பயமின்றி ஒருவரை வெட்டுகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளை மத்திய அரசு விடுக்காதது பேரறிவாளன் வழக்கில் கொடுத்த தீர்ப்பு மற்றவர்களுக்கு பொருந்தாது என முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும். ஆர்டிக்கிள் 6 யை பயன்படுத்தி நம் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தான். ஆனால் திமுக, காங்கிரஸ் கச்சத்தீவு என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. தருமபுர ஆதின பல்லக்கு நிகழ்ச்சியில் நான் பங்கேற்கின்றேன். மீண்டும் இடையூறு செய்தால் நானே தூக்குவேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.