கோவில்பட்டி/கும்பகோணம்: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளனை வாழ்த்தியதோடு, மேலும் 6 பேரையும் விடுதலை செய்வோம்’ என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டிப்பதாகவும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று, தங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திக் காமராஜ், துணைத் தலைவர் பி.எஸ்.திருப்பதி ராஜா, பொதுச்செயலாளர் கே.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.சண்முகராஜ், நகர தலைவர் கே.டி.பி.அருண்பாண்டியன், உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில நிர்வாகி ராஜினாமா
இதேபோன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கும்பகோணம் மஞ்சள்காரத் தெருவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன்(40) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் ஆகியோருக்கு தியாகராஜன் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.