இஸ்லாமாபாத்,-”இந்தியா, தன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. ஆனால் பாக்., அன்னிய சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ளது,” என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மத்திய அரசு நேற்று முன்தினம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.இது குறித்து சமூக ஊடகங்களில் இம்ரான் கானிடம் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதில்: இந்தியா, தனக்கே உரித்தான சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகிறது.
அதனால் தான் அமெரிக்காவுடன் ‘குவாட்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள போதும், அமெரிக்காவின் நெருக்கடியை மீறி ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் இந்திய மக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிகிறது.இதேபோல என் தலைமையிலான அரசும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றவே முயற்சித்தது.
துரதிர்ஷ்டவசமாக, வெளிநாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்து என் ஆட்சியை கலைத்தனர்.தற்போது நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் தலை அறுந்த கோழி போல சுற்றி வருகின்றனர்.இவ்வாறு இம்ரான் கான் கூறிஉள்ளார்.
இம்ரான் கான், தன் ஆட்சி கவிழ அமெரிக்காவும், பாக்., ராணுவமும் தான் காரணம் என கூறி வருகிறார்.மேலும், அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ள போதிலும், எவ்வித நெருக்கடிக்கும் பணியாமல் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவது பற்றி ஏற்கனவே இரு முறை பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Advertisement