மங்களூரு : மங்களூரில், 2010ல் நடந்த விமான விபத்தின் 12ம் ஆண்டு நினைவு தினம் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.துபாயிலிருந்து தட்சிண கன்னடா, மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு, 2010 மே 22ல், ‘ஏர் இந்தியா’ விமானம், 158 பயணியர், 6 விமான பணியாளர்கள், 2 விமானிகளுடன் வந்து கொண்டிருந்தது.தரையிறங்கும் போது, விமானம் விபத்துக்குள்ளானதில், 158 பேர் உயிரிழந்தனர்;
எட்டு பயணியர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினர். விசாரணையில், உதவி விமானியின் பேச்சை கேட்காமல், விமானி இயக்கியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விபத்துக்குள்ளான இடத்தில் தற்காலிகமாக நினைவு சின்னம் எழுப்பப்பட்டு, பலியானோர் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன், தன்னிருபாவி செல்லும் வழியில் கூலுார் என்ற இடத்தில், 90 சென்ட் நிலத்தில் நினைவு பூங்கா அமைக்கப்பட்டது.நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சியில், மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டீல், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
Advertisement