புதுடெல்லி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்ததையடுத்து, பல்வேறு மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளன.
உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரொல் மீதான வாட்வரி லிட்டருக்கு 2.08 ரூபாயும், டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு 1.44 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான் அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 2.48 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 1.16ரூபாயும் குறைத்துள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கேரளாவில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் விற்பனை வரியை குறைக்கும் திட்டம் இல்லை என அம்மாநில நிதியமைச்சர் கே என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.