புதுடில்லி-‘மங்கிபாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல், 10 நாட்களில், 12 நாடுகளில், 90க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுஉள்ளது. இதன் வேகம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதையடுத்து, எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இருந்தது. தற்போதும் அதன் தாக்கம் சில நாடுகளில் இருந்து வருகின்றது. இந்நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் வைரஸ் நோய் பரவத் துவங்கியுள்ளது.
கொப்புளங்கள்
கடந்த, 1958ல் குரங்குகளிடையே பரவிய இந்த வைரஸ் நோய், மனிதர்களிடையே 1970ம் ஆண்டு ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவியது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் ‘மங்கி பாக்ஸ்’ என அழைக்கப்படுகிறது.காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பெரியம்மை போல் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும்.
சாதாரணமாக ஆப்ரிக்காவில் மட்டுமே தென்படும் இந்த வைரஸ் நோய், தற்போது பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு தென்பட்டு உள்ளது. இதைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த, 10 நாட்களில் மட்டும், 12 நாடுகளில், 90க்கும் மேற்பட்டோருக்கு, மங்கி பாக்ஸ் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இது மிகவும் அசாதாரணமான சூழ்நிலை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிவுரை
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது:நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.