கரூர்: மின்னகத்திற்கு கடந்த 11 மாதங்களில் 8 லட்சம் புகார்கள் வரப்பெற்றுள்ளதாகவும் இதில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தினத்தையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சித் தொடங்க விழா மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (மே 22ம் தேதி) நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டு கூறியது, “கரூர் மாவட்டத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கான நிமிர்த்து நில் துணிநது சொல் திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரப்பெற்று தீர்வு காணப்பட்டுள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 3.24 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின்னகத்திற்கு கடந்த 11 மாதங்களில் 8 லட்சம் புகார்கள் வரப்பெற்று 99 சதவீதத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் உற்பத்தி செலவை ஒப்பிட்டு அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் நுகர்வு சராசரியாக 14,500 மெகாவாட் முதல் 17,500 மெகாவாட் வரையுள்ளது. இதன் சராசரி கணக்கிடப்பட்டு தமிழக மின் உற்பத்தி 4,320 மெகாவாட் என்பது 25 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 10,540 மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழக மின் தேவைக்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் வாங்கப்படுகிறது. இவற்றில் உபரியாக உள்ள மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு பரிமாற்ற முறையில் வழங்கப்படுகிறது” என்றார்.