மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முன்பாகவே திறப்பதால் அந்நீரானது கடைமடைப் பகுதியில் உள்ள விளைநிலங்கள் வரை சென்றடைந்து விவசாயத்திற்கு முழு பயனளிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்க இருக்கும் தண்ணீரானது டெல்டா பாசன விவசாயத்திற்கு பயனளிக்கும் வகையில் வீணாகாமல் சென்றடைய தமிழக அரசு உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமானது. அதே சமயம் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 க்கு பதிலாக முன்கூட்டியேயும், தாமதமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த வேளையில் இந்த ஆண்டு ஜூன் 12 க்கு முன்பாக மே மாதம் 24 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்படுவது முதல்முறையானது.
பருவகால மாற்றங்கள், பருவம் தவறிய மழை, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஆகியவற்றால் இது போன்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. அதாவது தொடர் மழை, காவிரி ஆற்றில் பெருவெள்ளம், கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் டெல்டா மாவட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்படும் சுமார் 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது முன்னதாகவே தண்ணீர் திறக்கப்படுவதால் வழக்கமாக பசன வசதி பெறும் நிலங்களை விட கூடுதலான விளைநிலங்களும் பாசன வசதி பெற வாய்ப்புண்டு. மேலும் குறுவையை தொடர்ந்து நடைபெற இருக்கும் சம்பா சாகுபடியையும் முன்கூட்டியே ஆரம்பிக்க இந்த தண்ணீர் கிடைக்கும்.
இந்நிலையில் ஏற்கனவே டெல்டா பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகள் ஆகியவற்றை முறையாக தூர் வாரி, பராமரித்திருக்க வேண்டும். அதன் மூலம் தற்போது திறக்கப்படும் மேட்டூர் அணையின் தண்ணீரானது கடைமடைப் பகுதி வரை பாசனத்துக்கு கிடைக்க வேண்டும்.
தமிழக அரசு, மேட்டூர் அணையிலிருந்து திறக்கும் தண்ணீரானது டெல்டா குறுவை மற்றும் சம்பா உள்ளிட்ட பாசன வசதி பெற வேண்டிய விளைநிலங்கள் உள்ள கடைமடைப் பகுதி வரை தடையின்றி சென்றடைந்து முழு பயன் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே தமிழக விவசாயத்தை, விவசாயிகளை, விவசாய கூலித்தொழிலாளிகளை பாதுகாக்க வேண்டுமென்றால் மேட்டூர் அணையின் தண்ணீரும் மிக மிக அவசியம் என்பதை தமிழக அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.