ஜூரிச்:
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், “37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறும்போது, “இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இந்த ஆண்டில் இதுவரையில் 1,284 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மேலும் 11 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதன் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
குரங்கு காய்ச்சலை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி சில வாரங்களில் நோயிலிருந்து மீண்டு விடலாம் என்றாலும், வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம், காய்ச்சல், கணுக்களில் வீக்கம், கொப்புளங்கள் போன்றவை இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
எளிதாக இந்த நோய் பரவிவிடாது என்றாலும் நெருங்கிய உடல் தொடர்புகள், பாலுறவு போன்றவற்றினால் பரவும். மனிதர்களுக்கு இந்த வைரஸ் கண்கள், மூக்கு, வாய், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.