கோல்கட்டா : ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக தன் மகளை நியமித்தது தொடர்பாக, மேற்கு வங்க அமைச்சரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, திரிணமுல் கட்சியைச் சேர்ந்த பரேஷ், மாநில கல்வித் துறை அமைச்சராக உள்ளார்.
இவருடைய மகள் அங்கிதா, அரசு ஆரம்பப் பள்ளியின் ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், அங்கிதாவின் நியமனத்தை ரத்து செய்தது. மேலும், 41 மாதங்களாக பெற்று வந்த சம்பளத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் பரேஷுடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நேற்றும் அவரிடம் விசாரணை நடந்தது. எந்த அடிப்படையில் அங்கிதாவுக்கு ஆசிரியை பணி வழங்கப்பட்டது என்பது தொடர்பாகவும், இந்த விவகாரத்தில் பரேஷ் அதிகாரியின் தொலைபேசி பேச்சுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக அங்கிதாவிடம் அடுத்த வாரத்தில் விசாரிக்க சி.பி.ஐ., திட்டமிட்டுஉள்ளது.
Advertisement