இத்தாலிய கண்ணாடியை அகற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைக் காணும்படி ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நமது காங்கிரஸ் நண்பர்கள் எப்போது பார்த்தாலும் எட்டு ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கண்களை மூடிக்கொண்டால் எப்படி வளர்ச்சியை காண முடியும். ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இத்தாலிய கண்ணாடியை கழற்றிவிட்டு இந்திய வளர்ச்சியைப் பாருங்கள்.
இந்த எட்டு ஆண்டுகளில் அருணாச்சலப் பிரதேசத்தில் நாங்கள் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியுள்ளோம். சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களை பலமுறை பார்வையிட்டுள்ளார். அம்மாநிலங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். பாஜக அமைச்சர்களும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்கிறோன். நான் இங்கு வருவது இது 14-வது முறை. அப்படியென்றால் பாஜக இப்பிராந்தியத்துக்கு தரும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் 2019 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் 9000 போராளிகள் ஆயுதங்களை விடுத்துள்ளனர். அசாம், அருணாச்சலப் பிரதேசம் இடையே நிலவும் மோதலைக் கட்டுப்படுத்தியுள்ளோம். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா இவ்விஷயத்தில் பெரிய பங்களிப்பை செய்துள்ளார்” என்றார்.
முன்னதாக, லண்டனில் நடைபெற்ற ‘ஐடியாஸ் ஃபார் இந்தியா’ என்ற மாநாட்டில் ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், “ஒரு பிரதமர் எதையும் கேட்க தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி எதையும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. இந்தியாவை மீட்பதற்காக காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலங்கள், மத்திய அரசுடன் உரையாட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. தற்போது இந்தியா நல்ல இடத்தில் இல்லை” என்றார்.