புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 31-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று லண்டனில் முகாமிட்டிருந்தார்.
ராகுல் காந்தி ட்விட்..
அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை தொலைநோக்குபார்வை கொண்டவர். அவரது கொள்கைகளால் நவீன இந்தியா வடிவமைக்கப்பட்டது. அவர் மனிதாபிமானம் மிக்கவர். மற்றவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எனக்கும், பிரியங்காவுக்கும் கற்றுத் தந்தவர். அவரை இழந்து வாடுகிறேன். அவரோடு ஒன்றாக இருந்த நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூருகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.