காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்றக் குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ-வும், கொறடாவாக விஜயதரணி எம்.எல்.ஏ-வும் இருக்கிறார்கள். கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற உரையைக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார்.
அவரது பேச்சை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்க வேண்டும் என விஜயதரணி அவையிலேயே பேசினார். ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் எதிரும்புதிருமாக செயல்படுவது விவாதப்பொருளானது. இது உட்பட பல விவகாரங்கள் தொடர்பான நமது கேள்விகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.
“சட்டமன்றத்தில் நீங்கள் பேசிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணியே கூறியிருக்கிறாரே?”
”தஞ்சாவூர் தேர்த் திருவிழாவின்போது தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நான் பேசினேன். அப்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த மகாமகம் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட துயரமான சம்பவத்தைக் குறிப்பிட்டேன். கும்பகோணத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசியதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
அதைத்தாண்டி எதையும் நான் பேசவில்லை. ஆனால், சட்டமன்றக் குழு தலைவரான நான் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி விஜயதரணி செயல்பட்டார். என் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார். அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். எனவே, அது குறித்து எங்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்திவருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்றக் குழுத் தலைவரான கே.ஆர்.ராமசாமி தலைமையிலான அந்த குழுவிடம் என்னுடைய கருத்துகளை அளித்துவிட்டேன். விஜயதரணியிடம் குழு விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுவருகிறது.”
“தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை உங்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கிறாரே?”
“நான் விளிம்புநிலையிலிருந்து வந்தவன் என்பதால் எனக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகிறார். ஏற்கெனவே நான் எம்.எல்.ஏ-வாக ஆனது ஜெயலலிதாவால்தான் என்று அவர் பேசியிருக்கிறார். அப்போது நான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இருந்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அ.தி.மு.க-வும் தேர்தல் கூட்டணி வைத்து, அப்போது நான் வெற்றிபெற்றேன். நான் ஒன்றும் இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயிக்கவில்லை.
ஜெயலலிதாவால் நான் வெற்றிபெற்றதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி, 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏன் தோற்றார்? ஜெயலலிதா ஆதரவில்தானே அவர் போட்டியிட்டார். பிறகு ஏன் அவர் வெற்றிபெறவில்லை என்பதற்கு அவரது பதில் என்ன? இப்போதும் நான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன் இணக்கமாக இருக்கிறேன். அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் நல்ல நட்புடன் இருக்கிறேன். ஆனால், இவரை முதல்வராக்கிய சசிகலாவுடன் இவர் நட்புடன் இருக்கிறாரா என்று எடப்பாடி பழனிசாமியைக் கேட்க விரும்புகிறேன்.
இன்னொரு கேள்வியையும் அவரிடம் நான் கேட்கவிரும்புகிறேன். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டது பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினார். தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரை கையைக் கட்டி வீதியில் இழுத்துவந்தது மனித உரிமையை மீறிய செயல் என்று ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டார். ஜெயக்குமாரால் கையைக் கட்டி குற்றவாளி போல இழுத்துச்செல்லப்பட்ட நபர் ஓர் அப்பாவி என்று அமைச்சர்கள் சேகர் பாபுவும், மா.சுப்பிரமணியனும் பதில் சொன்னார்கள்.
உடனே எழுந்த எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வைச் சேர்ந்த அந்த நபர் மீது எத்தனை வழக்குகள் இருக்கின்றன தெரியுமா? அவர், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவர்’ என்று அழுத்தமாகச் சொன்னார். ’நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவரைப் பற்றி பேசும் நீங்கள், நாற்பது மாதங்கள் சிறைத்தண்டனை பெற்ற உங்கள் தலைவரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று என்னால் கேட்டிருக்க முடியும்.
உண்மையில்லேயே அவர்களை நான் சங்கடப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், இதை நான் அவையிலேயே கேட்டிருக்க முடியும். அப்படி கேட்டிருந்தால் அவர் நிலை என்னவாக ஆகியிருக்கும்… ஆனால், நான் கேட்கவில்லை. அது என் நோக்கமும் இல்லை.”
“தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான அந்த மோதலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏன் நீங்கள் தலையிட வேண்டும்?”
“அப்படியில்லை. பாதிக்கப்பட்ட அந்த நபர் தி.மு.க-வைச் சேர்ந்தவரா, அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரா என்பது பிரச்னை இல்லை. ஒரு மனித உரிமை மீறல் நடக்கும்போது, அதை எப்படி நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
எனவே, நான் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், அந்த செயலை கண்டிக்கத்தான் செய்வேன்.”