புதுச்சேரி,-புதுச்சேரி கடற்கரையில் தவறவிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் அடங்கிய ஹேண்ட் பேக்கை பெரியக்கடை போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர் துாத்துக்குடியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வெங்கடேசன், 42; இவரது மனைவி சுஜாதா, 35; இருவரும், புதுச்சேரியில் நடந்த உறவினர்களின் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். நேற்று காலை 8.30 மணிக்கு, கடற்கரைக்கு வந்து சுற்றிப் பார்த்தனர். அப்போது, சுஜாதா, காந்தி சிலை அருகே தனது ஹேண்ட் பேக்கை வைத்துள்ளார். புறப்படும்போது மறந்து சென்று விட்டனர். இந்திரா சிலை அருகே சென்றபோது, ஹேண்ட் பேக்கை மறந்து வைத்து விட்டு வந்ததை அறிந்தனர்.உடனடியாக கடற்கரை சாலைக்கு வந்து பார்த்த போது, பேக்கை காணவில்லை. அதில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகைகள் இருந்ததால் பதற்றம் அடைந்தனர். அங்கு பணியில் இருந்த பெரியக்கடை போலீஸ்காரர்கள், முருகன், ஜெயநாதனிடம் தகவல் தெரிவித்துவிட்டு, போலீசில் புகார் கூறினர். அதன்பேரில் போலீசார் கடற்கரை சாலையில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகராட்சி துப்புரவு பணியாளர் ஜெயலட்சுமி என்பவர், கேட்பாரற்று கிடந்த ஹேண்ட் பேக்கை பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். ஹேண்ட் பேக்கை மீட்டு, உரியவர்களிடம், காட்டிய போது, தங்களுடையதுதான் என உறுதி செய்தனர். இதையடுத்து நகைகளுடன் மீட்கப்பட்ட, ஹேண்ட் பேக்கை, இன்ஸ்பெக்டர் கண்ணன், உரியவர்களிடம் ஒப்படைத்தார்.பாதுகாப்பாக பேக்கை எடுத்து வைத்த துப்புரவு பணியாளரையும், அரை மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசாரையும் பாராட்டினார்.
Advertisement