இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்கு முதன்முதலாக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பின் வீடு திரும்பியுள்ள கிரிக்கெட் ஜாம்பவனான
கபில் தேவ்
, ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
ஹரியானாவில் வருகிற 26ஆம் தேதி தன்னை ஆம் ஆத்மி கட்சியில் கபில் தேவ் இணைத்துக் கொள்வார் என்ற தகவலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அரசியலில் இறங்கப்போவதாக வெளியான தகவல் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விளக்கம் அளித்துள்ளார். “நான்
அரசியல்
கட்சியில் இணைவதாக வெளியான செய்தி குறித்து இப்போது தான் அறிந்தேன். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. மக்கள் தவறான செய்தியை பரப்புவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், அதனை பகிரங்கமாக அறிவிப்பேன்.” என்று கபில் தேவ் விளக்கம் அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் களமிறங்குவது புதிதல்ல. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். தற்போது 34ஆண்டுகள் பழமையான சாலை தகராறு வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையை சித்து அனுபவித்து வருகிறார்.
மேற்குவங்க கிரிக்கெட் வீரர்களான மனோஜ் திவாரி மற்றும் அசோக் திண்டா ஆகியோர் தற்போது மேற்கு வங்க சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தவிர ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.