கோவை: திமுக ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமான ஆட்சி. அந்த ஆட்சிக்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக, பேட்டரி கார் வசதியை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: இந்துசமய அறநிலையத்துறையில், கடந்த ஆண்டு 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 1,641 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டு 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 2,441 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு முன்பு 21 கோயில்களில் பேட்டரி கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை பழுதடைந்து காணப்பட்டதால், அவற்றை பழுது பார்க்கவும், கூடுதலாக 13 கோயில்களில் பேட்டரி கார் வசதியை ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பேட்டரி கார் வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிக பக்தர்கள் வரும் வெள்ளியங்கிரி மலைக்கோயில், கண்ணகி கோயில், போளூர் நரசிம்மர் கோயில், திருவண்ணாமலை பர்வதமலை, சதுரகிரி மலை ஆகிய 5 மலைக்கோயில்களில் மலைப்பாதை அமைக்க ரூ.1 கோடி முதல்வர் ஒதுக்கியுள்ளார். திமுகவின் ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவருக்குமான ஆட்சி. அந்த ஆட்சிக்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி.
5 கோயில்களுக்கு மாஸ்டர் பிளான்
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், பக்தர்களின் தேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளாமல், இந்தத் துறையை இயக்கியவர்கள் சரியான முறையில் இயக்கவில்லை. அதனால் இத்துறையில் பல பிரச்சினைகள் உள்ளன. அது அனைத்தையும் மீட்டெடுத்து செல்ல வேண்டிய சூழலில் நாங்கள் உள்ளோம். தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் பாலூட்டும் அறை ஏற்படுத்தப்படும். மருதமலை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், முதல்கட்டமாக நடப்பாண்டு இறுதிக்குள் 48 கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக கழிவறை ஏற்படுத்தித் தரப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்து தரும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. பக்தியை வைத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்வதில்லை. அழையாத வீட்டுக்கு விருந்தாளியாக செல்பவர்களை பற்றி எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. இந்த ஆட்சி ஆத்திகர்கள், நாத்திகர்களால் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்தாண்டு ரூ.662 கோடி மதிப்பில் கோயில்களில், திருப்பணிகளுக்கு உத்தரவிட்டு பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டு 1,500 கோயில்களில் ரூ.1000 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒரு கால பூஜை திட்டத்தில் 12,959 கோயில்கள் இருந்தன. இதில் 2 ஆயிரம் கோயில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களுக்காக ரூ.40 கோடியை மானியமாக முதல்வர் ஒதுக்கியுள்ளார். மேலும், 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல கோயில்கள் வருமானம் இல்லாமல் உள்ளன. அவற்றில் முதல்கட்டமாக 80 கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி அரசு நிதியாக முதல்வர் வழங்கியுள்ளார்.
கடந்த ஓராண்டில் ரூ. 2,500 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து ரூ.180 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை வழிபாடு அனைத்து கோயில்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.