ஹீரா மீது காதலான காதல் அப்படியொரு காதல் முரளிக்கு! அதை நேருக்கு நேர் சொல்லி எதிராளியின் ரியாக்ஷனைத் தெரிந்து கொண்டிருந்தால் ரெண்டுல ஒண்ணு அவருக்கு முடிவு தெரிஞ்சிருக்கும்! அப்படிச் செய்யாமல் உணர்ச்சிகளை மனத்துக்குள் பூட்டி வைத்து அவதிப்பட்டு, இதய நோய் வந்து படுத்து… கடைசிக் கட்டத்தில் ஹீரா `ஐ லவ் யூ’ சொன்ன குட் நியூஸ் முரளிக்குத் தெரிவிக்கப்பட்டால் அவர் இதயம் அதிர்ச்சி தாங்காது என்பதால் படம் முடியும் வரையில் காதலர்களை ஒன்றுசேர்க்கவேயில்லை!
காலேஜ் டூர் போகும் முரளிக்கு போன இடத்தில் எதுவுமே ரசிக்கவில்லை – உடன் ஹீரா வராத காரணத்தால்! விழுந்தடித்துக் கொண்டு முன்னதாகவே ஊர் திரும்பிவிடும் அவருக்கு, பார்க்கில் இன்னொரு ஆடவனுடன் ஹீரா பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது! தன் அக்காவின் காதலனுடன்தான் ஹீரா பேசிக் கொண்டிருந்தார் என்ற விவரம் மிகவும் தாமதமாகத் தெரிய வரும்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறார்!
நல்ல சஸ்பென்ஸ் – முரளிக்கு!கல்லூரி ஆண்டு விழாவில் பாடி முடித்ததும் மயங்கி விழும் முரளியின் காதல் ஆழத்தை, தலைமை தாங்க வரும் பாரதிராஜா (ஜஸ்ட் எ கெஸ்ட் ரோல்!) `வெறும் கற்பனையிலே மட்டும் இதை எழுதியிருக்க முடியாது. இவன் சொந்த அனுபவத்தில் எழுதியிருக்கான்னு நினைக்கிறேன்…’ என்று பக்கத்தில் வரும் டாக்டரிடம் படு காஷூவலாகச் சொல்லிக் கொண்டே நடப்பதும்…
அதை யதேச்சையாக ஹீரா கேட்க நேரிடுவதும்… நைஸ்!மருத்துவக் கல்லூரி புரொபசர் என்றால் கொஞ்சமாவது கெளரவம் கொடுக்க வேண்டும். இங்கு புரொபசர் ஜனகராஜ் ஆபரேஷன் பண்ணப்போகும் இடத்தில் ஆள் மாறாட்டம் நடப்பதாகக் காட்டி அசிங்க காமெடி செய்வது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
ரன்னிங் ரோல் சின்னி ஜெயந்த்துக்கு! முரளியின் `க்ளாஸ்மேட்-கம்-ரூம்மேட்’ டான இவர், நண்பனின் காதல் கைகூடுவதற்காக படாத பாடுபட்டு… பலே! பிரமாதப்படுத்துகிறார்!எடுத்துக் கொண்ட ஒருதலைக் காதல் சப்ஜெக்டை விட்டு அங்கு இங்கு நகராமல் ஒரே நேர்பாதையில் பயணப்பட்டிருக்கிறார் டைரக்டர்! ஸ்கோப் கம்மி எனினும், இதை அலுப்புத்தட்டாமல் சொல்லியிருப்பதில் அவருக்கு வெற்றியே!
– விகடன் விமரிசனக் குழு