ஹோம்இன்ஷூரன்ஸ்பாலிசி: சொந்த வீடு என்பது பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தின் கனவு எனலாம். அவ்வகையில் வீடடின் மீதான முதலீடு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பெருங்கனவை சேமிப்பு மூலமாகவோ அல்லது வீட்டு கடன் மூலமாகவோ பலரும் அடைந்து வருகின்றனர். ஆனால், அப்படி மிகவும் கடினப்பட்டு உழைத்த வாங்கிய வீட்டை நம்மில் பலர் பாதுகாக்க மறந்து விடுகிறோம்.
பைக், கார் போன்று வீட்டிற்கும் இன்சூரன்ஸ் செய்யலாமா? என்றால் நிச்சயமாக இன்சூரன்ஸ் பண்ணலாம். ஒரு ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வீட்டை வெள்ளம், புயல் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராகவும், தீ விபத்து, திருட்டு, கொள்ளை, பயங்கரவாதம் போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்தும் வீடு மற்றும் அதன் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை ஈடு செய்து விட உதவுகிறது.
இதேபோல் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கூடுதல் பிரீமியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள ஃபர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இது சொந்த வீடு வைத்திருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல வாடகை குடியிருப்பில் உள்ள உங்களின் தனிப்பட்ட உடமைகளைப் பாதுகாக்க உதவுகிறது.
தவிர, சொத்து காப்பீட்டு கொள்கையாகவும் ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறது. எனவே தான் உங்கள் வீட்டின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் காப்பீட்டை பெறுவது இருக்கிறது.
ஹோம் இன்ஷூரன்ஸ் ஏன் தேவை?
இந்தியாவில் சுமார் 2,44,119 கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் குடியிருப்பு வளாகங்களில் நடந்துள்ளன. இதேபோல் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திருடப்பட்ட சொத்து இழப்பு சுமார் 45% அதிகரித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் நடக்கும் சுமார் 70% திருட்டுகள் வீடுகளில் நடப்பவை தான். ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் முன், உங்கள் வீடு அல்லது உடமைகளில் முன்பே இருக்கும் சேதங்கள், கட்டமைப்பு மற்றும் உற்பத்தி குறைபாடுகள் உள்ளிட்டவற்றை பாலிசி கவர் செய்யாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வீட்டினுள் இருக்கும் உங்கள் பொருட்களுக்கு மட்டுமே பாலிசி எடுக்க முடியும்.
ஒவ்வொரு தனிப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள முன்னணி வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பல ஹோம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இவை வாடிக்கையாளர்கள் வீட்டுக் காப்பீட்டின் அவசியத்தைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரியான பாலிசியை தேர்வு செய்யவும் உதவுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil