இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ்

அம்பத்தூர்:
திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருமுல்லைவாயலில் நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கே.என்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ந.அனந்தகிருஷ்ணன், மா. ரமேஷ், பா.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர்கள் து.சேகர்,தினேஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தின் முன்னேற்றம் தான் பா.ம.க.வின் இலக்காகும். அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் அதிகாரம் இருந்தால் பல முன்னேற்றங்களை செய்து தர முடியும்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ம.க.விடம் தீர்வு, செயல் திட்டங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026-ல் பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம். தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் தான் ஒப்பிட வேண்டும். 
தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் இருக்கக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். வேலையின்மையை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் பாட்டாளி மாடல் ஆகும். தமிழக மக்கள் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.
அதனை நாம் வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும். இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன. பா.ம.க.விடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், தமிழகத்தில் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டியது தான் திராவிட மாடலாகும்.
தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை. சென்னையை சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளிடம் பணம் உள்ளது. நம்மிடம் உழைப்பு உள்ளது.
2026-ல் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பாமக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் கே.பாலு, நிர்வாகிகள் பாலயோகி, குரு ஏழுமலை, சசிகலா ஜெயராமன், செந்தில்குமார், கோபிநாத், பாண்டுரங்கன், ஹரிஷ்,பாபுஜி,மாரியப்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.